இந்தியா கலக்கல் வெற்றி * தொடரை வென்று அபாரம் | ஜனவரி 21, 2023

தினமலர்  தினமலர்
இந்தியா கலக்கல் வெற்றி * தொடரை வென்று அபாரம் | ஜனவரி 21, 2023

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ராய்ப்பூரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு பின் ஆலென், கான்வே ஜோடி துவக்கம் கொடுத்தது. மறுபக்கம் இந்திய ‘வேகங்கள்’ போட்டுத்தாக்கினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆலென் (0) போல்டானார். அடுத்து வந்த நிகோல்சை (2) முகமது சிராஜ் வெளியேற்றினார். மறுபடியும் மிரட்டிய ஷமி, மிட்செல் (1) அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்து அனுப்பினார். 

கான்வே (7) ஹர்திக் பாண்ட்யாவின் அசத்தலான ‘கேட்ச்சில்’ திரும்பினார். ஷர்துல் தாகூர் தன் பங்கிற்கு கேப்டன் டாம் லதாமை (1) பெவிலியன் அனுப்ப, நியூசிலாந்து அணி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் போட்டியில் சதம் விளாசிய பிரேஸ்வெல், பிலிப்ஸ் இணைந்து அணியை மீட்க போராடினர். 6 வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது, மீண்டும் வந்த ஷமி இம்முறை பிரேஸ்வெலை (22) அவுட்டாக்கினார். 

சான்ட்னர் (27) போல்டானார். வாஷிங்டன் சுந்தர் சுழலில் பிலிப்ஸ் (36), பெர்குசன் (1) சரண் அடைந்தனர். கடைசியில் குல்தீப் பந்தில் டிக்னெர் (2) அவுட்டானார். நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஷமி 3, பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். 

 இந்திய அணிக்கு ரோகித், சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 10 ஓவரில் 52/0 ரன் எடுத்தது. ரோகித் ஒருநாள் அரங்கில் 48 வது அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது, ரோகித் (51) ஷிப்லே பந்தில் அவுட்டனார். கோஹ்லி (11) நிலைக்கவில்லை. இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

சுப்மன் (40), இஷான் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ஒருநாள் தொடரை 2–0 என இந்தியா கைப்பற்றியது. 

மூலக்கதை